Saturday, March 31, 2018

பொதுவுடைமை

       இந்த பதிவானது பொதுவுடைமை (Communism) என்றால் என்ன என்று அறிந்துகொள்ள விரும்புபவர்களுக்கு உதவும். பொதுவுடைமை என்பது ஒரு சித்தாந்தம், நடைமுறைக்கு ஒத்துப்போகும் சித்தாந்தம்.

       பொதுவுடைமையின் ஆரம்பமானது அனைத்து சிந்தனைகளையும் போல ஒரு கற்பனை சித்தாந்தமாக இருந்து நடைமுறை சித்தாந்தமாக உருமாறியது ஆகும். பொதுவுடைமையின் மையக்கருத்து மாற்றமே ஆகும். எல்லாமே மாற்றத்திற்கு உள்ளாகின்றன, எதுவும் நிலையானது அல்ல. இது தான் பொதுவுடைமையின் முதல் கூறு. இவ்வண்டத்தில் அனைத்து கருத்துகளும், பொருட்களும் இந்த கருத்தை மெய்ப்பிக்கின்றன. மனித வரலாற்றை எடுத்துகொள்வோம். தொடக்கத்தில் மனிதன் நாடோடியாய் திரிந்து வேட்டையாடி உயிர்வாழ்ந்தான், அதன் பின் ஆற்றங்கரை ஓரமாய் விவசாயம் செய்து நாகரிகங்களை வளர்த்தான், அடிமை சமுதாயத்தை அமைத்து தானே அடிமையாகி கொண்டான், மன்னர்களை அதிகாரம் செய்ய அழைத்தான், தற்பொழுது மூலதனம் என்னும் சமூக உறவினை உருவாக்கி கட்டுண்டு கிடக்கிறான். நிரந்தரமானது எதுவும் இல்லை, அது கடவுளானாலும் சரி கருத்தானாலும் சரி.

       சரி அனைத்தும் மாற்றதிற்கு உட்படுத்தப்படுகிறது. அப்படியானால், தற்போது நடைமுறையில் உள்ள முதலாளித்துவ சமுதாயமும் மாற்றதிற்கு உட்படக்கூடியது தானே? ஆம். ஆனால், ஏன் மாற வேண்டும்? ஏனெனில், முதலாளித்துவப் பொருளாதாரமானது தொழிலாளியிடம் இருந்து உழைப்பைச் சுரண்டுகிறது, பயன்-மதிப்புகளை உருவாக்குவதற்கு பதிலாக பரிமாற்று-மதிப்புகளை உருவாக்குகிறது, வர்க்கங்களை உருவாக்குகிறது, தொழிலாளியை அவர் உற்பத்திச்செய்யும் பொருட்களில் இருந்து அந்நிய படுத்துகிறது. 

    இதை எல்லாம் அது எவ்வாறு செய்கிறது? மூலதனம் என்னும் சமூக உறவினை ஏற்படுத்துவதன் மூலமாக. மூலதனம் என்றால்? ஒரு தொழிலாளி தன் அன்றாட தேவைகளுக்காக ஒரு முதலாளியை சந்திக்கிறார். அந்த முதலாளியிடம் தன் உழைப்பு சக்தியை விற்று அதற்கு மாற்றான பொது சமன் மதிப்பைப்* பெறுகிறார்.(இக்கருத்து ஆழமாக ஆராய்ந்தால் முரண்பாட்டுக்கு உள்ளாகும், ஆனாலும் மேலோட்டமாக இது போதுமானது) இந்த பொது சமன் மதிப்பால் அன்றாட தேவைகளை மட்டுமே பூர்த்தி செய்ய இயலும். தன் உழைப்புச் சக்தியை மீட்டெடுத்த பின்னர் மீண்டும் தன் தேவைகளுக்காக அவர் உழைப்புச் சக்தியை முதலாளியிடம் விற்க உந்தப்படுகிறார். 

 * - பணம்

     

No comments:

Post a Comment