Saturday, November 4, 2017

Evolution: A living wonder

    பரிணாம வளர்ச்சி: வாழும் அதிசயம்

       இவ்வுலகில் உள்ள அனைத்து உயிரினங்களும் வேறு ஒரு உயிரினத்தின் வழியாக, மாறுபாடுகளாக, பிறந்தது, தனித்தனியாக உண்டாக்கப்பட்டது அல்ல. இதுதான் பரிணாம வளர்ச்சி.

       இதையே இன்னும் விரிவாக கூறுவதானால், பல செல் உயிரிகள் அனைத்தும் பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் ஒரு செல் உயிரியில் இருந்து வழி வழியாக பிறந்தவையே (descended). இது சார்லஸ் டார்வின் எனும் அறிவியல் மேதையால் 19-ம் நூற்றாண்டிலேயே நிரூபிக்கப்பட்டு விட்டது. அவர் அறிவியல் மேதை அல்லவா? எனவே, அவர் இது எவ்வாறு நடைபெறுகிறது என்றும் கூறினார். அக்கோட்பாட்டின் பெயர் தான் இயற்கை தேர்வு கோட்பாடு ( Natural selection). சுற்றுப்புற சூழலுக்கேற்ப தங்களை தகவமைத்துக் கொள்ளும் உயிரினங்கள் தொடர்ந்து வாழவும், இனப்பெருக்கம் செய்து பெருகவுமாக அமையும் போக்கு இயற்கைத் தேர்வு எனப்படும்.

      கோட்பாடுகளை முடித்துவிட்டோம். இப்பொழுது, விளக்கத்திற்கு வருவோம். இயற்கைத் தேர்வினை விளங்கவைப்பதற்காக, டார்வின் "On the Origin of Species" (உயிரினங்களின் தோற்றம்) எனும் புத்தகத்தில் கையாண்ட முறையை நானும் இங்கே கையாள்கிறேன். நமக்கு பரிச்சயமான செயற்கை தேர்வு முறை தான் அது. அதுதான், நாம் பார்திருப்போமே பல்வேறு வகையான செல்லபிராணிகளை. அடர்த்தியான மயிரினை உடைய pomeranian வகை நாய்க்குட்டிகளையும், அடர்த்தி குறைவான மயிரினை கொண்ட doberman நாய்குட்டிகளையும். இரண்டும் ஒரே இனத்தை சேர்ந்தவை தான். ஆனால், என் இவ்வளவு வேறுபாடு? இவை யாவும் மனிதனால் விரும்பி செய்யப்பட்ட மாற்றங்கள். எனக்கு காது நீட்டமான doberman போன்ற நாய்க்குட்டி வேண்டுமானால், அதே வகையில் காது நீட்டமான இரு நாய்களை சேர்க்கை செய்து வைப்பேன். இப்படி குறிப்பிட்ட பண்புகளுக்காக தேர்வு செய்து செய்து குறுகிய காலத்தில் வந்தவையே இம்மாற்றங்கள். இது போன்ற பல்வேறு வகையான நாய்குட்டிகளை, பூனைகளை, பூக்களை அதன் பண்புகளுக்காக தேர்வு செய்கின்றனர்.

       இதே வேலையை இயற்கை தேர்வு வேறுவிதத்தில் செய்கிறது. அதாவது ஒரு உயிரினம் உயிர் வாழ ஏதேனும் ஒரு பண்பு துணைநிற்குமானால், அப்பண்பை, அவ்வுயிரினத்தை வாழவைப்பதன் மூலம் இயற்கை வாழவைக்கிறது. சிங்கத்தையும் மானையும் எடுத்துக்கொள்வோம். சிங்கத்தின் பின்னங்கால்களும், மானின் தாக்குப்பிடிக்கும் திறனும் ஒன்றுக்கொன்று எதிரில் நிற்கின்றன. சொல்லப்போனால், இதுவும் இயற்கை தேர்வுக்குள் அடங்கிய ஒன்றுதான். சிங்கம் தூரத்தில் இருப்பதை கண்டு தண்ணீர் குடிக்காமல் மிரண்டு ஓடும் மான் தாகத்தால் இறப்பதற்கு வாய்ப்புள்ளது, அதேசமயம் சிங்கம் மிக அருகில் வரும்வரை தண்ணீர் குடித்துக்கொண்டே நிற்கும் மான் சிங்கத்தின் தாடையில் சிக்கிக்கொள்ளவும் வாய்ப்புள்ளது. இதற்கு பெயர் தான் ஓரு மிருகத்தின் flight distance. அதாவது, மற்ற மிருகங்கள் தங்களை நெருங்க எவ்வளவு தூரம் ஒரு மிருகம் அனுமதிக்கிறது என்பதே இதன் அர்த்தம். இவ்வாறு பல்வேறு வகையில் இயற்கை தேர்வு இயங்குகிறது.

       முடிக்கும் முன் சிலர் சொல்லும் அர்த்தமற்ற விவாதங்களுக்கு விடைகொடுக்க முயல்கிறேன். பரிணாம வளர்ச்சி உண்மையானால் ஏன் என் கண்ணில் ஒரு குரங்கு கூட மனிதனாய் மாறவில்லை? மிகவும் அர்த்தமற்ற கேள்வி இது. மனித இனமான நாமும், குரங்குகளும் பொதுவான ஒரு மூதாதயரை கிட்டத்தட்ட 25 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பகிர்த்துக்கொண்டுள்ளோம். அம்மூதாதையர் குரங்கும் அல்ல மனிதனும் அல்ல. மேலும், வேறு ஒரு கேள்வி. அதாவது, முதல் மனிதன் யார்? யாருமே முதல் மனிதன் அல்ல, இக்கேள்விக்கான பதிலை நாம், படைப் புவாதிகளின் கண்ணோட்டத்தில் இருந்து விலகி நின்று பார்க்க வேண்டும். எல்லாருமே நம் பெற்றோரின் பிள்ளைகள் தாம். அவர்கள் அவர்களின் பெற்றோர் (அதாவது நம் தாத்தா பாட்டி) பெற்றடுத்த பிள்ளைகள் தாம். வரலாற்றில் பின்னோக்கி சென்றால் நாம் ஒரு காலகட்டத்தை அடைவோம், அப்பொழுது நமக்கும் அங்கு இருக்கும் மனிதன் போன்ற உயரினத்திற்கும் வேறுபாடுகள் இருக்கும். ஆனால், இம்மாற்றங்கள் எவையுமே வேகமாக நடக்ககுடியவை அல்ல. மெதுவாக, மிக மெதுவாக, தலைமுறை தலைமுறையாக நிகழக்கூடிய மாற்றங்கள்.


குறிப்புகள்:

1. Google
2. Richard Dawkins, (The Greatest show on Earth: The Evidence for Evolution).
3. Charles Darwin, (The Origin of species).

4 comments: