Friday, January 5, 2018

விவாதங்களின் வறுமை


                 விவாதங்களின் வறுமை


     யோசித்து பார்த்தால், கற்றுணர்ந்த சமூகமொன்றில் இத்தகைய தலைப்பை எடுப்பதே விவாதத்திற்குரிய ஒன்றாகும். எனினும் அதை சற்று ஒதுக்கிவைத்துவிட்டு நாம் தலைப்பினுள் செல்வோம். தேநீர் கடைகளில் தொடங்கி தொலைக்காட்சி வரை விவாதங்கள் நடக்கத்தான் செய்கின்றன. ஆனால்,அவை யாவும் விவாவதங்களின் பண்புகளை கொண்டுள்ளனவா? என்று சற்று ஆய்வோம்.

    சில வாரங்களுக்குமுன் வந்த "தி ஹிந்து" தமிழ் நாளிதழின் நடுப்பக்க கட்டுரை ஒன்றின் சாரம் இது தான். அதாவது, ஒரு விவாதத்தில் ஒரு கேள்வி கேட்கப்படும்போது அதற்கு தொடர்பில்லாத, கேள்வி கேட்கும் மனிதருக்கு தொடர்புடைய எதோ ஒரு கருத்தை கேள்விக்குள்ளாக்குவது. எடுத்துக்காட்டாக,"ஏன் நேற்று நீ பள்ளிக்கு வரவில்லை?", என்று ஆசிரியர் மாணவரை பார்த்து கேட்டால் பதிலுக்கு அம்மாணவன், "நேற்று முன்தினம் நீங்கள் ஏன் பள்ளிக்கு வரவில்லை?" என்று கேட்பது போலாகும். இவ்வெடுத்துக்காட்டில் குறிப்பிடப்படும் கருத்து சற்று சாதாரணமான ஒன்றாகும். ஆனால், இதேபாணியில் இவ்வுலகில் நடக்கும் விவாதங்கள் பெரும்பாலும் கேள்வி கேட்பவரின் உணர்வுபூர்வமான மனநிலையை சோதிப்பவையாகும். இதை நாம் விவாதங்களின் வறுமையுள் ஒன்றாக கொள்வோம்.

    அடுத்து நாம் பார்க்கப்போவது நாம் எல்லோரும் எப்போதோ ஒருமுறை செய்திருக்கக்கூடிய ஒன்றுதான். ஒருவர் சொல்லும் கருத்து பிடிக்கவில்லையானால் அக்கருத்தை சொல்பவரை திட்டுதல் அல்லது குறைகூறுதல். இத்தகைய செயல்கள் இப்போது சமூகவலைத்தளங்களில் பரவலாக நடக்கின்றன. ஒருவர் ஏன் ஒரு கருத்தை சொல்கிறார், அதன் பின்புலம் என்ன என்று  ஆராயாமல் குறை கூறுவது நமது  அறிவை நாமே குறுக்கிக்கொள்ளும் செயலாகும்.

   இது சற்று யோசிக்கவைக்கும் வறுமை. அதாவது, ஒருவர் செய்யும் செயல் சரி என்றோ தவறு என்றோ தீர்ப்பிடுவது. எவர் ஒருவரும் மற்றவரின் வாழ்க்கையை வாழ்ந்து பார்க்க முடியாது. மற்றவரின் அனுபவங்களை அனுபவித்திருக்க முடியாது. அவர் கிழப்பருவம் எய்தியவராக இருந்தாலும் சரி, குழந்தையாக இருந்தாலும் சரி. ஆகவே, தீர்ப்பிடுதல் என்பது விவாதங்களுள் சிறப்பான நிலையை கொண்டுள்ள மோசமான ஒரு வறுமை ஆகும்.

  எனக்கு அறிந்த சில விவாதங்களின் வறுமையை பற்றி நான் கூறினேன். உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கும் விவாதங்களில் உள்ள வறுமையை கண்டெடுத்து தெளிவடையுங்கள்.

                                                - அலன்

No comments:

Post a Comment