Wednesday, October 5, 2016

Art is politics


 
        கலை அரசியலா? என்ற கேள்விக்கே இடமில்லை. உற்றுநோக்கின் கலை ஓர் அரசியல், அரசியல் ஓரு கலை என்பது விளங்கும்.  கலை என்பது தனியொருவரின் அகவெளிப்பாடாகும். அத்தனியொருவரின் அகவெளிப்பாடு சமூகம் முழுமையாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டால் அதுவே அச்சமூகத்தின் அகவெளிப்பாடாக மாறுகிறது. அதேசமயம், எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு விதிமுறை எப்பொழுதும் சரியான, மாற்றக்கூடாத, மாற்றவியலாத விதிமுறையல்ல. சரியான ஒருசெயல் பிரபலமாகாமலும், பிரபலமான ஒருசெயல் தவறாகவும் இருக்கலாம். ஒரு நல்ல கலைஞன் தவறைச்சுட்டிக் காட்டுகின்ற முதல் விரலாகவும், சரியானவற்றை முதலில் பார்க்கின்றக் கழுகின் கண்ணாகவும் இருக்க வேண்டும்.
     

         எவன் ஒருவன் சமூகத்தின் உணர்வை, அதன் வலியை, அதன் விடுதலையை, அதன் தேவையை புரிந்து கொள்கிறானோ அவன் சிறந்த அரசியல்வாதியாகிறான். அரசியல் செய்ய ஆளுமை மட்டும் போதாது, ஆழ்ந்த அன்பும் வேண்டும். அத்தகைய ஆளுமையையும் அன்பையும் அள்ளிக்கொடுக்கும் ஆலையாக கலை விளங்குகிறது.  ஒரு தலைவன் தன் மக்களின் மீது வைத்திருக்கும் பரிவை மக்களுக்கு உணர்த்தக் கலை உதவுகிறது. அதேவேளையில் மக்களின் கோபத்தைத் தலைவனுக்கு புரியவைக்கவும் கலை பயன்படுகிறது.


          கலையானது  ஒருநாட்டின்  வரலாற்றை, அந்நாடு கொண்டிருந்த அரசியலை வர்ணிக்கிறது. அது ஒருகாலக்கட்டத்தின் பெருமையை பின்வரும் சந்ததியினருக்கு எடுத்துச்செல்கிறது. எந்த ஒரு சமூகமும் அதன் சொந்த வரலாற்றை அறிந்திராமல் நல்வாழ்வு பெறவியலாது. வரலாறு மறந்த சமூகம் உலகத்தால் மறக்கப்படும்.


           சிறந்த கலையானது திரும்ப திரும்ப ஒருவரை ரசிக்கவைப்பது மட்டுமன்று, ஒவ்வொரு முறையும் ஒருவரை சிந்திக்க வைப்பதே ஆகும்.
அறிவெனும் பெட்டகத்திலே ஒவ்வொரு முறை ரசிக்கப்படும்போதும் புதுப்புதுக் கருத்துக்களை பிரதிபலிக்கும் ஆற்றல் கலைக்கு உண்டு. அவ்வாறு ரசிகரின் சிந்தனையை தூண்டுவதன் மூலம் பல வகையில் அவரை ஆக்கப்பூர்வமாக மேம்படுத்துவது கலையாகும்.
     

        அரசியல் ஒரு கலை, நுண்கலை என்றும் தெளிவாகச்சொல்லலாம். என்ன தான் ஒரு தலைவன் நல்லத் திட்டங்களை வகுத்தாலும் சரியான முறையில் அது மக்களைச் சென்றடையவில்லையானால் அத்திட்டங்களை வகுத்ததற்கே  அர்த்தமல்லாது  போய்விடும். வரலாற்றை நாம் ஆய்வோமானால் கலையை பயன்படுத்தத்தெரியாத அரசுகள் பல வீழ்ந்ததும், பல அரசுகள் நற்கலையால் எழுச்சியுற்றதும் புலப்படும்.



                                                                                             - அலன் கிஃப்ட்சன் 

No comments:

Post a Comment